உணவெனும் மாமருந்து!
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
என்கிறது திருக்குறள். உணவு செரிமானம் ஆகி பசித்த பின் உணவு உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும்போது ஒரு மனிதனுக்குத் தனியாக மருந்து என எந்தவொரு தேவையும் இருக்காது. அந்த உணவே மருந்தாகும் என்று சொல்கிறது திருக்குறள்.
சமச்சீரான உணவு, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் நல்ல மன ஆரோக்கியம் ஆகியவை நம் வாழ்க்கையை மேம்படுத்தும். நாம் எம்மாதிரியான உணவினை உட்கொள்கிறோமோ அது நம் செயல்களிலும் மன நிலையிலும் பிரதிபலிக்கும். ஆரோக்கியமற்ற உணவுகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். சமச்சீர் உணவு என்பது உடலுக்குத் தேவையான புரதம், கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றை போதுமான அளவு தினமும் சேர்த்துக் கொள்வதாகும்.
காலை உணவினை அந்த நாளின் ”மூட் கிரியேட்டர்” என்று தான் கருத வேண்டும். காலை உணவானது 8 மணிக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். காலை 10.30 மணி அளவில் சர்க்கரையின்றி எலுமிச்சை பானம், நீர் விட்டு கடைந்த மோர் அல்லது காய்கறி சாலட் சாப்பிடலாம். 12.30 மணிக்கு மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கீரை, சாலட், முளைகட்டிய பயறு வகைகள், காய் மற்றும் பொரியல் சேர்த்து சாப்பிடலாம். பிற்பகல் மூன்று மணிக்கு சர்க்கரை இல்லாத அல்லது நாட்டுச் சர்க்கரையுடன் காபி, அல்லது டீ மற்றும் சுண்டல் அல்லது காய்கறி சாலட் சாப்பிடலாம். இரவு 8 மணிக்கு உண்ட பின், படுக்கைக்கு செல்லும் முன் பால் அருந்துவது நல்லது.
உறங்கி எழுந்த பிறகு முதல் உணவாக காலை உணவு இருப்பதால் எக்காரணத்தைக் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. ஊட்டச்சத்து மிக்க காலை உணவினைத் தவிர்க்காமல் நாள் முழுதும் சுறுசுறுப்பாய் இருக்க உதவும். காலை உணவு அந்த நாளில் உடல் இயங்குவதற்கான சக்தியை அளிக்கக்கூடியது. காலை உணவினைத் தவிர்ப்பதனால் சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
இன்று பலர் அறுசுவைகளில் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடைய உணவுகளைத் தவிர்க்கிறார்கள். அவற்றை உணவில் கட்டாயமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். நமது உணவினில் அறுசுவை கூறுகளும் இருப்பது அவசியம். இனிப்புப் பதார்த்தங்களை முதலில் எடுத்துக்கொள்ளும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து செரிமானம் தூண்டப்படுகிறது. இச்செயல் உண்ட உணவினை செரிமானமாக்கி அடுத்த வேளை பசியெடுக்க உதவும். கசப்பான உணவினை உண்ட பின் மற்ற உணவினை உண்பது சிரமம். ஆதலால் கசப்புச் சுவையை கடைசியில் உண்ண வேண்டும். இதற்கிடையில் மற்ற புளிப்பு, துவர்ப்பு மற்றும் உவர்ப்பு சுவையுடைய பொருள்களை உண்ணலாம்.
புரதத்தை அதிகரிக்கவும்:
புரதங்கள் நம் உடலினை நோய்க் கிருமிகளிடம் இருந்து காக்கும் அரண்கள். உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றின் போதும் புரதச்சத்து உணவுகளை உட்கொள்ளவே மருத்துவா்கள் அறிவுறுத்தினா். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடும் போது அவை வெகு விறைவாக ஜீரணமாகி விடும். உணவில் புரோட்டினின் அளவு அதிகரிக்கும் போது ஜீரணம் மட்டுப்பட்டு உடலுக்குத் தேவையான ஆற்றல் தொடர்ந்து கிடைக்கும். அதிகம் புரதம் இருக்கும் உணவினைக் காலையில் சாப்பிடும் போது மூளையில் தைரொகசைன் அளவு (ஒரு வகை அமினோ அமிலம்) அதிகரித்து நரம்பு செல்கள் ரசாயன உற்பத்தியினை மேற்கொள்ள உதவும்.
புரதச் சத்து எடுத்துக்கொள்ள, சைவ உணவாளர்கள் பொட்டுக் கடலை, கொண்டைக் கடலை, மொச்சை, பட்டாணி மற்றும் பருப்பு வகைகளைப் பயன் படுத்தலாம். சுண்டல், மொச்சை போன்றவற்றைத் தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் மட்டுமே முழுச் சத்தைப் பெற முடியும். புரதச்சத்து நிறைந்த கருப்பு உளுந்தானது வளரும் குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கும் உள்ள தேவையற்ற கொழுப்பினைக் கரைக்கும். அசைவம் சாப்பிடுகிறவர்கள் மீன், கோழி இறைச்சி போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் மூளையின் ஆற்றலை அதிகரித்துக் கொள்ளலாம். இந்தச் சத்து பால், தயிரிலும் இருக்கிறது. மேலும் மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்குத் தேவையான பீட்டா கரோட்டின், விட்டமின் ஏ சத்துள்ள கேரட் மற்றும் பப்பாளி பழத்தில் இருக்கிறது. கீரை வகைகள், முட்டை மஞ்சள் கரு, உலர்ந்த பழங்கள் மற்றும் இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து உள்ளது.
மூளைக்கான உணவு:
ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் மூளையின் செயல் திறனை அதிகரிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. வைட்டமின் ஏ, சி, இ போன்றவை மூளை செல்கள் விரைவில் பழுதடையாமல் பாதுகாக்கின்றன. முட்டை, மீன், கேரட், பூசணி, பல வகையான காய்கறிகள், பழங்கள் இத்தேவையினைப் பூர்த்தி செய்கின்றன. ஒமேகா 3 அதிகம் கொண்ட மீன வகைகளை சேர்த்துக்கொள்வது நினைவாற்றலுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் நல்லது. குறைந்த எண்ணெயில் வறுக்கப்பட்ட அல்லது கிரில் செய்யப்பட்ட மீன் சாப்பிடலாம். பிளாக்ஸ் விதைகள், வால்நட், பாதாம், பூசணி விதை, சூரியகாந்தி பூ விதைகள், புரோக்கோலி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வல்லாரை கீரை நினைவாற்றலை பெருக்கக்கூடியது. காய்கறிகளில் பீன்ஸ்,அவரைக் காய் போன்றவை மூளையின் பலத்துக்கு நல்லது.
சம்மணமிட்டு அமர்ந்து உணவினை உண்ணும் போதும் நேராக உட்கார்ந்து சாப்பிடும் போதும் உணவானது இரைப்பைக்குத் தடையின்றி செல்கிறது. சரியான உணவை சரியான நேரத்தில், சரியான அளவில் சரியான முறையில் எடுத்துக்கொள்வது அவசியம்.
பூ போன்ற சாதத்திற்கு மலர் அரிசியினை உபயோகியுங்கள். மேற்கூறிய தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாய் இருப்பின், இப்பக்கத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
மலரட்டும் அன்பும் ஆரோக்கியமும்.