ஒரே நேரத்தில் அனைத்து உணவுகளையும் ஒரே தட்டில் நிரப்பி குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது சாதாரண காரியமல்ல. அதற்கு மாற்றாக சிறிது சிறிதாக உணவினை அவ்வப்போது சாப்பிட ஊக்குவிக்கலாம். எப்போதும் ஒரே வகையான உணவினைச் செய்து தராமல் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பல்வகை உணவுகளையும் தினமும் சமைத்துக் கொடுங்கள். இந்த உணவு வகைகளில் சிலவற்றின் சுவை குழந்தைகளின் சுவையுணர்ச்சியினைத் தூண்டிட உதவலாம். பெரும்பாலான தாய்மார்கள் ஒரே மாதிரியான உணவுகளைக் குழந்தைகளுக்கு தயார் செய்து கொடுப்பதோடு தங்களை ஒரு கூண்டுக்குள் அடைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் உணவின் மேல் குழந்தைகளுக்கு ஏற்பட வேண்டிய அதீத பற்றினையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்த தவறிவிடுகிறார்கள்.
குழந்தைகள் வளர வளர அவர்களது பழக்கவழக்கங்களும் சுவையணர்வும் எதிர்பார்ப்புகளும் மாறிக்க்கொண்டே இருக்கும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிடிக்காத உணவினைக் குழந்தையிடம் வெகு நாட்கள் திணிப்பதனால் உணவின் மீதான பற்று குறைந்து போகிறது. அன்பான அனுகுமுறை குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் உதவும். நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரியும்படி உணவின் மகிமையினையும் சத்துக்களின் முக்கியத்துவத்தினையும் ஆரோக்கிய வாழ்வு மற்றும் உடல் நலன் பற்றியும் மெல்ல மெல்ல அனுதினமும் எடுத்துரைப்பதன் மூலம் உணவின் மீதான மரியாதையினை ஏற்படுத்துங்கள்.
குழந்தைகள் சாப்பிடும் போது பற்ற விளையாட்டுப் பொருட்களையோ மொபைல் போன் விளையாட்டுகளையோ அனுமதிக்காமலிருப்பது நலம். சாப்பிட அமர்ந்த பின் உணவின் மேல் மட்டும் கவனம் இருக்கும்படி செய்ய வேண்டும். சாப்பிட்ட பின்னர் மட்டும் தண்ணீர் கொடுப்பது சிறப்பு. இதனால் உணவினை மிச்சம் வைக்காமல் சாப்பிட முடியும். நேரமின்மை என்ற ஒரே காரணத்திற்காக பள்ளி செல்லும் குழந்தைகள் உணவினைத் தவிர்க்காமல் பார்த்துக் கொள்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் உதவும்.
எந்த வகை உணவுகளைக் குழந்தைகளுக்கு தயார் செய்யலாம்?
- பருப்பு தயிர் நார்சத்து நிறைந்த காய்கறிகள்.
- கடைந்த கீரைகள்.
- முளைகட்டிய பயிர் வகைகள்.
- பேபி கார்ன்.
- மசாலா கார்ன் (மக்காச்சோளம்).
- தயிர்.
- முட்டை மற்றும் ஆம்லெட் (நன்கு வேக வைக்க வேண்டும்).
- ப்ரோக்கோலி.
- கேரட் பீட்ரூட் இட்லி.
- மசித்த வெஜிடேபிள் தோசை. கம்மங்க்கூழ்.
- எளிதில் விழுங்கக் கூடிய சிறிய ரக அரிசி சாதம்.
- சிறு தானிய சேவை (நூடில்ஸ்)
- செக்கு எண்ணெயில் சமைத்த வடை.
- வித்தியாசமான வடிவங்களில் சப்பாத்தி பூரி.
- அனைத்து பழங்கள்.
- இளநீர்.
- உலர் திராட்சை.
இது போல் இன்னும் பல உணவுகளை தயார் செய்து கொடுக்கலாம்.