சோகத்தில் பூத்த நட்பும் தன்னம்பிக்கையும். - Malar Brand Rice

blog-post-img

ஒரு நடுத்தர வயதினையுடைய பெண் கோவையின் ஆகச்சிறந்ததாகக் கருதப்படும் ஒரு பெரும் ஹைப்பர்மார்க்கெட்டின் பில்லிங் செய்யுமிடத்திற்கு வந்து நின்றாள். அவளது கவலை தோய்ந்த முகத்தினை பார்த்த கணம் “மேடம்” என்ற அன்பான புன்முறுவலுடன் காணப்பட்ட பணிப்பெண்ணிடம் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொடுக்கிறாள்.

கிச்சடி பொன்னி அரிசி, காளான், மசாலாக்கள், பெரிய சாக்லெட் பெட்டி, ஸ்ட்ராபெர்ரி பழங்கள், கேக்குகள் என நீண்டது. ”திச் இஸ் மை பேவரைட்” என சொல்லிக் கொண்டே ஒவ்வொரு பொருளினையும் தன் கைகளில் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பணிப்பெண்ணிற்கு மனதிற்குள் பல கேள்விகள் எழ ஆரம்பித்தன. கேட்டுவிடலாம் என எத்தனிக்கையில் ”என் பெயர் ரம்யா என பணிப்பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு ”இவையெல்லாம் என் பேவரைட் உணவுகள். எனக்கு நானே விருந்து படைத்திடப்போகிறேன். ஏனென்றால் நான் வெகு காலம் வேலை செய்த நிறுவனத்திலிருந்து என்னை வெளியேற்றி விட்டார்கள். ”ஐ ஹேவ் டு ட்ரீட் மைசெல்ஃப் வெல்” என்று சொல்லி உங்கள் பெயர் எனக் கேட்டவளிடம் பணிப்பெண் “என் பெயர் மலர்” என்றாள்.

அவள் கவலை தோய்ந்த முகமும், தளுதளுத்த குரலும் அவள் உண்மையில் உடைந்து போய் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தன்னிச்சையாகத் தெரியப்படுத்தியது. ஒரு சில வினாடிகளுக்குப் பின் அவள் மலரின் கண்களைப் பார்த்து “யெஸ் இது விருந்துக்கான சிறந்த தருணம். இது உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் ஆத்மார்த்தமான அக்கறை; Self Care என்றேன். மேலும் தொடர்ந்த நான், இப்பொழுது நான் என்ன சொன்னாலும் அது உங்கள் மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளாக அமையலாம். ஆனால் சில வருடங்கள் கழித்துத் திரும்பிப் பார்க்கையில் நடந்தவையெல்லாம் ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் என்பது உங்களுக்கே புரியும் என்றேன். இன்று நடந்த இந்த நிகழ்வு உங்கள் வாழ்வினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். அதற்குத் தேவை Self Care. You deserve to treat yourself என்றேன்.

என் வார்த்தைகளைக் கேட்ட அடுத்த சில வினாடிகளில், “ஒஹ் யெஸ். எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது. என்னால் அதனை அனுமானிக்க முடிகிறது. மாற்றத்திற்கு என் மனம் எப்பொழுதுமே தயாராகத்தான் இருக்கும். ஆனாலும் இது ஒரு சோகமான நாள். நான் மகிழ்வாகத்தான் உள்ளேன். வாழ்க்கை என்றுமே நன்றாகத்தான் இருந்திருக்கிறது. அதற்காக நான் என்றும் கடவுளுக்கும் குடும்பத்தாருக்கும் நன்றியுடன் இருந்திருக்கிறேன். ஏன், இப்பொழுது கூட ஒரு அருமை தோழி என் கண் முன் நிற்கின்றாள்” என்ற அவளது குரலில் ஒரு சிறு தன்னம்பிக்கை பூத்ததை அறிய முடிந்தது. இவ்வளவு சோகத்திலும் அவள் என்னைத் தோழியாகக் கருதிய அந்த நன்றியுணர்வு என்னை அவள் மேல் அன்பு கொள்ளச் செய்தது. இத்தனைக்கும் காரணம் நான் பறக்க விட்ட புன்முறுவலாகவே இருக்க முடியும். அதீத கவலையுடன் உள்ள ஒருவரது மனதினை ஆழமாக ஆராய்ந்திட எனது புன்முறுவல் எவ்வளவு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். அவள் அவளது சுயத்தை இனம் கண்டு கொண்டதற்கு நான் செலவிட்டது வெரும் இரண்டு நிமிடங்கள். ஆனால் இது அவளது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான ஒரு துவக்கமாக இருக்கும் என்பதை நினைக்கும் போது அந்த நாள் எனது நாளை இனிமையானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கியது.

மீண்டும் சந்திக்கலாம். நான் அருகாமையிலுள்ள அபார்ட்மெண்டில் தான் வசித்து வருகிறேன் அவள் பில்லுக்கான பணம் செலுத்திய அவளிடம் “better days will come” என்றேன். கண் சிமிட்டி ஆமோதித்த அவளிடம், “ஒரு நிமிடம் ரம்யா. I have something for you என சொல்லிக் கொண்டே என் பையிலிருந்து ஒரு பரிசுக் கூப்பனை எடுத்து அவளிடம் நீட்டினேன். இது கடந்த மாதத்தில் எங்கள் நிறுவனம் நடத்திய Lucky Draw-வில் எனக்குக் கிடைத்த பரிசு. இதில் என் பெயர் உள்ளது. ஆனால் இது உங்களுக்கானதாக இருக்க வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இவ்வுலகம் உங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை நீங்கள் நம்ப உதவும் என நான் சொன்னதைக் கேட்டு அடுத்த சில வினாடிகள் ரம்யாவிடம் வார்த்தைகளே வரவில்லை. நான் பேசிய அந்த வார்த்தைகள் எனக்கே ஒரு ஆச்சர்யம் தான்.

ரம்யா இந்த கூப்பன் என்னிடம் 5 நாட்களாக உள்ளது. பல பொருட்களை இந்த 5 நாட்களில் வாங்கிய எனக்கு இக்கூப்பனை உபயோகிக்கத் தோணவே இல்லை. ஏனென்றால் இது உங்களுக்கானது என ஏற்கனவே தீர்மானமாகியிருக்கிறது என நான் கூறி முடிக்கையில் அவள் கண்களில் நீர்த்துளிகள். பரிசுக்கூப்பனை விட மதிப்பு மிக்கது அத்தருணம்.

மீண்டும் சந்திக்கலாம் எனக் கூறி பரிசுக்கூப்பனுடன் ரம்யா விடை பெற்ற இத்தருணத்தில் என் மனம் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தது. நான் எதற்காகப் பரிசினை வென்றேன். 6 billing counter உள்ள இந்த கடையில் அவள் ஏன் என்னிடம் வந்தாள். ஏன் அவளது சோகத்தினைப் பகிர்ந்து கொண்டாள். ஏன் நான் பரிசுக்கூப்பனை உபயோகிக்க மறந்திருந்தேன். எப்படி திடீரென அவளுக்கு பரிசுக் கூப்பனை அளித்தேன். இவையெல்லாம் முன்பே தீர்மாணிக்கப்பட்டதோ! விடை தெரியா பல ஆச்சர்யங்கள் நிறைந்த இவ்வாழ்வில் நாம் ஒவ்வொருவரையும் தேற்றுவது என்பது இயலாது. ஏன் பல நேரங்களில் என்னை நானே தேற்ற முடியாமல் தவித்த தருணங்கள் பல. உணர்வுகள் மேகங்கள் போல… வரும் போகும். அவற்றை தீவிரமாய் எடுத்துக்கொள்ளும் போது அது நமக்கு அதீத மகிழ்வையோ பாதிப்பையோ ஏற்படுத்தும். நாம் வாழ்வின் போக்கில் தன்னம்பிக்கையுடனும் பல திட்டமிடல்களிடனும் முன்னேறி சென்று கொண்டேயிருக்க வேண்டும்.

என் தாய் உயிருடன் இருந்திருந்தால் அவளிடம் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டிருப்பேன். ஆனால் அவள் இல்லை. அவள் நிச்சயம் இதை பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து என்னைப் பெருமையுடனும் நிம்மதியுடனும் கண்டு கொண்டிருப்பாள் என நம்புகிறேன். பெருமையுடன் நான் – மலர்.

Post navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *