ரசனை - Malar Brand Rice

ரசனை

இது வாழ்வின் ரசனை பற்றிய நுண்மையான பதிவு.

மழைச் சாரல், மேக ஓவியங்கள், எறும்பு ஊரும் அணிவரிசை, மல்லிகையின் மணம், மசால் தோசையில் கரையும் வெண்ணைய், அண்ணாச்சிக் கடையில் நியூஸ் பேப்பரில் வேகமாக பொருட்களை சுருட்டும் வேகம். இவைகளை ரசிக்க முடிந்தால் நீங்கள் வாழ்க்கையை ரசனையுடன் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.

உணவின் சுவையினை சிலாகியுங்கள். நகரங்களில் வாழும் பலருக்கும் வீட்டில் சமைத்த உணவின் மேல் ஒரு ஏக்கம். என்ன தான் தரமான ஹோட்டலில் சாப்பிட்டாலும் வீட்டு சமையலில் கிடைக்கும் திருப்திக்கு ஈடு இல்லை. நம் அக்காலத்தில் பாட்டி சாம்பார் பொடியினைக்கூட உரலில் இடிச்சு தான் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது எல்லாமே பாக்கெட் மசாலாவாகி விட்டது.

மூளைக்குள் ரசனையினையும் அது சார்ந்த தேடலினையும் நாம் வளர்த்துக் கொண்டால் வாழ்வு ருசிகரமானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்மில் பலர் வெளி நாடுகளுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் உணவு வகைகளைச் சுவைப்பதில் ஏனோ ஆர்வம் காண்பிப்பதில்லை. கலாச்சாரத்தின் அடிப்படை உணவு. நல்ல உணவின் சுவை எக்காலத்திலும் நம் மனதை விட்டு அழிவதில்லை. அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் சிலர் அந்நாட்டின் விதவிதமான உணவு வகைகளைத் தேடித்தேடிச் சென்று அதன் வாசனை, நிறம், ருசி என்று புலன்களுக்கு விருந்து படைப்பவர்களும் உண்டு.

சாலையோர உணவகத்தினை வைத்துப் பிழைப்பை நடத்தும் ஒரு எளிய வயதான பாட்டியின் கைப்பக்குவமும் ருசியும் அதில் கிடைக்கும் திருப்தியும் பல நேரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் கூட கிடைப்பதில்லை. காரணம் நமது மனம். அதீத பசியிலோ, அவசர கதியிலோ, குறைந்த செலவினில் திருப்தியாய் உட்கொள்ள வேண்டும் என்ற உணர்வு மேம்படும் போதோ அல்லது நண்பர்களின் பரிந்துரையில் ஒரு உணவகத்துக்குச் செல்லும் போதோ நமது மனதானது ரசனையினைக் கிளறி விடுகின்றது.

சமையல் ஒரு கலை. ஓவியத்திற்கும் இசைக்கும் ஒத்த ஒரு உண்ணதமான கலை. அதில் ரசனை உள்ளவர்களால் மட்டுமே சமையலின் நுட்பங்களை அறிந்து அனுதினமும், வாழ்வு முழுதும் திவ்யமான சுவையினை அனுபவிக்க முடியும். மிக்சியில் அரைத்த சட்னிக்கும் உரலில் அரைத்த சட்னிக்குமான சுவையின் வித்தியாசம் போல்! வாழ்வின் சுவை ரசனையிலும் அதற்கான மெனக்கெடலிலுமே உள்ளது.

வீட்டின் மாடித் தோட்டத்திலோ, வீட்டின் பின்புறத்திலோ நாம் ரசனையுடனும் ஆர்வத்துடனும் வளர்க்க முற்படும் செடிகளில் விளையும் சத்தான காய்கறிகளிலும் கீரைகளிலும் அடங்கியுள்ளது ஆரோக்கியமும் அன்பும் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டலும்.

கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கிய கமலாத்தா பாட்டிக்கும், சாந்தி சோஷியல் சர்வீஸ் மக்களுக்காக நடத்தி வரும் மலிவு விலை உயர் தர உணவகங்களிலும் இருப்பது வாழ்வின் மேலுள்ள ரசனையும் மக்கள் மேலுள்ள அன்பையும் தவிற வேறென்னவாக இருக்கும்.

நீ தான் என் பொன் வசந்தம். லவ் யூ… என தினம் ஒரு முறை சொல்லி சிலாகித்துக் கொள்ளும் தம்பதியரின் வாழ்வின் ரசனையைப் போல் வாழ்வை இனிதாக்கும் பல மந்திரங்கள் நம்மிடமே ஒளிந்து கொண்டுள்ளன.

வாழ்வின் சமநிலைக்குத் தேவை ரசனை. அதை வெளிக் கொணர்வோம். மலரட்டும் ரசனை.

மேற்கூறிய தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாய் இருப்பின், இப்பக்கத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

பூ போன்ற சாதத்திற்கு காங்கயம் மலர் அரிசி.

Post navigation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *